இந்தியாவில் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகளை திறக்க மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. கர்நாடகாவில் ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
தமிழகம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நாளைமறுதினம் முதல் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் டெல்லி அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. பல்வேறு விசயங்களுக்கு தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. ஆனால் மதிய உணவு இடைவேளை குறித்து தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட அதிகாரிகள் தடுமாறியுள்ளனர்.
டெல்லி மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறை பின்வருமாறு:-
1. வகுப்பறையில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 50 சதவீத மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். காலை, மாலை என இரண்டு நேரம் வகுப்புகள் நடத்தப்படும். இரண்டிற்கும் இடையில் குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும்.
2. மாணவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் உணவு, புத்தகங்கள், பென்சில் போன்ற பொருட்களை பகிர்ந்து கொள்ளக் கூடாது.
3. உணவு இடைவேளையின்போது மாணவர்கள் திறந்த வெளியில் வைத்து சாப்பிட வேண்டும். ஒரே நேரத்தில் அதிக அளவில் கூடிய நிலையில் சாப்பிடக்கூடாது. இது எந்த அளவிற்கு சாத்தியப்படும் என்பது தெரியவில்லை. ஒரு வகுப்பறையில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தால் அவர்கள் எப்படி சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியும். அந்த அளவிற்கு பள்ளி வளாகத்தில் இடம் இருக்குமா?. இதனால் இதுகுறித்து மேற்கொண்டு விரிவாக தெரிவிக்கவில்லை.
4. மாற்று இருக்ககைள் தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
5. பள்ளிக்கு வர பெற்றோர்களின் ஒப்புதல் கட்டாயம்.
6. பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப விரும்பாவிட்டால், மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள்.
7. கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் ஸ்டாஃப்கள், மாணவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
8. பள்ளி வளாகத்திற்குள் தனிமைப்படுத்தப்படும் அறை அமைக்கப்படுவது கட்டாயம். தேவைப்பட்டால் ஸ்டாஃப்கள் மற்றும் குழந்தைகள் ஓய்வு எடுத்ததுக் கொள்ளலாம்.
9. பள்ளியில் உள்ள இடங்கள் தொடர்ந்து சுத்தப்படுத்த வேண்டும் என்பதை நிர்வாகம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். கழிப்பறையில் சோப், தண்ணீர் கட்டாயமாக இருக்க வேண்டும். அதேபோல் சானிடைசர், உடல் வெப்பநிலை பரிசோதிக்கும் கருவி, மாஸ்க் போன்றவை இருத்தல் வேண்டும்.
இவ்வாறு டெல்லி மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.