X

டெல்லியில் வன்முறை ஓய்ந்தது – அமைதி திரும்பியது

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த வாரம் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வடகிழக்கு பகுதியான ஜாப்ராபத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் அருகில் உள்ள பகுதிகளுக்கும் தீயாக பரவியது. மவுஜ்பூர், கோகுல்புரி, பஜன்புரா, சந்த்பாக், பாபர்பூர், யமுனா விகார் போன்ற வடகிழக்கு பகுதிகள் வன்முறையாளர்களின் பிடியில் சிக்கி சின்னாபின்னமானது.

வன்முறையாளர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து கற்களால் தாக்கிக்கொண்டனர். துப்பாக்கியால் சுட்டும் வெறியாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் வீடுகள், வணிக கட்டிடங்கள், வழிபாட்டு தலங் கள், வாகனங்களுக்கு தீ வைத்தனர். சுமார் 4 நாட்களுக்கும் மேலாக நடந்த வன்முறையில் அந்த பகுதிகள் போர்க்களம்போல் காட்சியளித்தது.

நாட்டையே உலுக்கிய இந்த வன்முறை சம்பவங்களில் 42 பேர் உயிரிழந்தனர். சுமார் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வன்முறை தொடர்பாக 600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களில் நேற்று முன்தினம் முதல் படிப்படியாக அமைதி திரும்பி வருகிறது. பல இடங்களில் கடைகள், வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டன.

இந்த நிலையில் வன்முறையால் பாதித்த இடங்களில் பொதுமக்கள் நேற்று வழக்கம்போல் தங்களது பணிகளை தொடங்கினார்கள். கடைகள் உள்ளிட்ட நிறுவனங்கள் காலையில் திறக்கப்பட்டன. கடைகளில் பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மக்கள் வாங்கினார்கள்.

பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகளை தொடங்கியதால் சாலைகளில் ஆட்கள் நடமாட்டத்தை காண முடிந்தது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. பல இடங்களில் வெறிச்சோடிய சாலைகளில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர்.

அந்த பகுதிகளில் நேற்றும் பாதுகாப்பு படையினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். சில இடங்களில் மக்களின் அச்சத்தை போக்குவதற்காக பாதுகாப்பு படை வீரர்கள் அணிவகுப்பு நடத்தினர். வதந்திகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என அவர்கள் பொதுமக்களிடம் தெரிவித்தனர்.

வன்முறை காரணமாக வடகிழக்கு பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. இந்த நிலையில் வருகிற 7-ந் தேதி வரை பள்ளிக்கூடங்கள் திறக்கப்படாது எனவும், நிலைமையை பொறுத்தே அதன்பின்பு பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையே வன்முறை தொடர்பாக வதந்தி பரப்புபவர்கள் குறித்து புகார் அளிக்க வசதியாக டெல்லி மாநில அரசு வாட்ஸ்-அப் நம்பரை அறிவித்துள்ளது.

யாரேனும் வன்முறை குறித்து தவறான தகவலை பகிர்ந்தால் உடனடியாக அதனை பகிர்ந்தவர் பெயர் மற்றும் அந்த செல்போன் எண் ஆகியவற்றை அரசு அறிவித்துள்ள வாட்ஸ்-அப் எண்ணுக்கு தெரிவிக்கும்படியும், வதந்தி பரப்பும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

டெல்லியில் மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்களை துண்டாடுவதையே தொழிலாக வைத்துள்ள சில அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் காயங்களுக்கு மருந்து போடுவதற்கு பதிலாக அதில் உப்பை தூவி எரிச்சலை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்கள் கண்டிப்பாக சிறையில் அடைக்கப்படுவார்கள். நமது நாட்டில் ஒற்றுமையையும், அமைதியையும் காப்பது நமது அனைவரின் கடைமையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் டெல்லி வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரிப்பதற்காக தேசிய மனித உரிமைகள் ஆணையம் களத்தில் இறங்கியுள்ளது. இந்த வன்முறை குறித்து நேரில் விசாரிப்பதற்காக ஒரு குழுவை நியமித்துள்ளதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. அந்த குழுவினர் விரைவில் விசாரணையை தொடங்க உள்ளனர்.

Tags: south news