தென்ஆப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் கண்டறியப்பட்டது. இது முன்பிருந்த வைரஸ்களை விட வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவி உள்ளது.
இந்தியாவிலும் ஒமைக்ரான் பாதிப்பு உள்ளது. இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு சோதனை நடத்தப்படுகிறது. குறிப்பாக ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.
முதன்முதலாக கர்நாடகா மாநிலத்தில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிபடுத்தப்பட்டது. பின்னர் குஜராத், டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் ஒமைக்ரானின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அங்கு வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் சிலருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
நேற்று மும்பை தாராவியை சேர்ந்தவர் மற்றும் பச்சிளம் குழந்தை உள்பட மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதேபோல் குஜராத்திலும் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு 32 ஆக உயர்ந்து இருந்தது.
இந்த நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் வைரசுக்கு மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வேயில் இருந்து தலைநகர் டெல்லிக்கு திரும்பியவருக்கு நடத்திய பரிசோதனையில் ஒமைக்ரான் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அந்த நபர் தென்ஆப்பிரிக்காவுக்கும் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து இந்தியாவில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் 2 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 17 பேர் ஒமைக்ரான் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.