X

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை சந்திக்க சென்ற எம்பி-க்கள் தடுத்து நிறுத்தம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தன்று நடந்த வன்முறைத் தொடர்ந்து, எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மீண்டும் டெல்லிக்குள் நுழைந்துவிடாதபடி, போலீசார் பேரிகார்டுகளை அமைத்தும், தடுப்புச்சுவர் எழுப்பியும் பாதுகாப்பு அரண்களை அமைத்துள்ளனர்.

இந்நிலையில், டெல்லி- உ.பி. எல்லையான காசிப்பூரில் போராடும் விவசாயிகளை சந்திப்பதற்காக எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லியில் இருந்து பேருந்தில் புறப்பட்டுச் சென்றனர். தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா, திருமாவளவன், ரவிக்குமார், சு.வெங்கடேசன் ஆகியோர் சென்றனர். மல்லிகார்ஜுன கார்கே, ஹர்சிம்ரத் கவுர் பாதல், சுப்ரியா சுலே, சுகதா ராய் உள்ளிட்ட தலைவர்களும் சென்றனர்.

அவர்கள் காசிப்பூர் எல்லையை அடைந்ததும், போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். விவசாயிகளை எம்பிக்கள் சந்தித்தால் பிரச்சனை ஏற்படலாம் என்பதால், எம்பிக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். விவசாயிகளை சந்திக்க தங்களை அனுமதிக்கும்படி காவல்துறை அதிகாரிகளிடம் எம்பிக்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால்,  அவர்களை அனுமதிக்கவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.