வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சமீப காலமாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் வெப்ப அலையின் தாக்கம் மிகத் தீவிரமாக உள்ளது.
பல இடங்களில் நேற்று இயல்பு நிலையை விட 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பநிலை பதிவாகி இருந்து. இரவு நேரங்களிலும் வெப்பக் காற்று வீசி வருவதால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் ஜூன் 18-ம் தேதி வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் பல வாரங்களாக நிலவும் கடுமையான வெப்ப அலைக்கு மத்தியில் இன்று சில பகுதிகளில் மழை பெய்தது. ஆர்.கே.புரம் பகுதியில் மழை பெய்தது. அரியானா மாநிலம் குருகிராமிலும் மழை பெய்துள்ளது. டெல்லியில் இன்று காலை முதலே ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குறைந்தபட்ச வெப்பநிலை 28.4 டிகிரி செல்சியஸாக இருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிற்பகலில் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.