டெல்லியில் புதிய வீட்டில் குடியேறும் ராகுல் காந்தி
மோடி குறித்து அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கடந்த மார்ச் 23-ந்தேதி சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதைத்தொடர்ந்து எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட அவர் டெல்லியில் வசித்து வந்த துக்ளக்லேன்12-ல் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்து விட்டு தற்காலிகமாக தனது தாய் சோனியா காந்தியுடன் குடியேறினார்.
ஆனால் அவர் தனக்காக ஒரு வீட்டை தேடி கொண்டிருந்தார். அவருக்கு டெல்லி உள்பட நாடு முழுவதும் இருந்து ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் வீடுகளை வழங்க முன் வந்தனர். ஆனால் அதற்கு ராகுல் காந்தி மறுத்ததோடு தனக்கு பொருத்தமான வீட்டை தேடி வந்தார். அவர் விரைவில் டெல்லியில் வேறு இடத்தில் வீடு மாறலாம் என கூறப்பட்டது.
இந்நிலையில் அவர் டெல்லியில் நிஜாமுதின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு விரைவில் மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வீடு டெல்லி முன்னாள் முதல்-மந்திரி ஷீலாதீட்சித் குடும்பத்திற்கு சொந்தமானது ஆகும். அவர் தனது கடைசி ஆண்டுகளை இந்த வீட்டில் தான் கழித்து வந்தார்.
இந்த வீடு 13-ம் நூற்றாண்டை சேர்ந்த சூபி சூபி குவாஜா நிஜாமுதின் அவுலியாவின் தர்காவில் இருந்து சில 100 மீட்டர் தொலைவில் உள்ளது. ராகுல் காந்தி கடந்த டிசம்பர் மாதம் மேற்கொண்ட தனது பாரத் ஜோடா யாத்திரை டெல்லியில் நுழைந்த போது இந்த தர்காவில் பிரார்த்தனை செய்து இருந்தார்.