Tamilசெய்திகள்

டெல்லியில் நாளை இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவிக்க உள்ள இரண்டு யோசனைகள்

அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்தியில் 2-வது முறையாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. வரும் தேர்தலிலும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. அதே நேரத்தில் பா.ஜ. க.வை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்ற நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கி உள்ளது.

காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 29 கட்சிகள் ஒருங்கிணைந்து நாடு முழுவதும் பா.ஜ.க.வுக்கு எதிராக போட்டியிட திட்டமிட்டு வருகிறது. இதற்காக இந்தியா கூட்டணியின் சார்பில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் முதல் கூட்டம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூரிலும், 3-வது கூட்டம் மும்பையிலும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் இன்னும் பிரதமர் வேட்பாளர் யார்? என்று ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இந்தியா கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டம் என்னென்ன என்பது பற்றி தொடர்ந்து விவாதித்து வருகின்றனர்.

இதற்கிடையே மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் தனது முழு கவனத்தையும் அங்கு திருப்பியது. இதனால் இந்தியா கூட்டணிக்குள் சில சலசலப்புகள் எழுந்தன. மாநில தேர்தல்களில் விட்டுக் கொடுக்காமல் கூட்டணி கட்சிகள் களத்தில் நின்றதால் 3 மாநிலங்களில் பாரதிய ஜனதா எளிதில் வெற்றி பெற்றுவிட்டது.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அளித்த பேட்டியில் 3 மாநில தேர்தல் முடிவுகள் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்தான். இது பாராளுமன்ற தேர்தல் முடிவை பாதிக்காது. பொதுவாக சட்டமன்ற தேர்தலின்போது மாநில பிரச்சினைகள்தான் தலைதூக்கி காணப்படும். அவைதான் இத்தகைய முடிவுக்கு காரணம் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. வென்றிருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்குமான வாக்கு வித்தியாசம் 10 லட்சம் பேர் தான். சத்தீஸ்கரில் 6 லட்சம் வாக்குகள் தான் பா.ஜ.க. அதிகம் பெற்றுள்ளது. மத்தியபிரதேசத்தில் மட்டும் தான் 35 லட்சம் வாக்குகளை கூடுதலாக பா.ஜ.க. பெற்றுள்ளது என்று புள்ளி விவரங்களை அவர் பட்டியலிட்டு இருந்தார்.

பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் இருந்திருந்தால் 3 மாநில வெற்றியை பா.ஜ.க. பெற்றிருக்க முடியாது என்பதே உண்மை. எனவே பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளை அனைத்து மாநிலங்களிலும் ஒன்று சேர்க்கும் முயற்சிகளை இந்தியா கூட்டணி மேற்கொள்ளும். எனவே 3 மாநில தேர்தல் முடிவு இந்தியா கூட்டணிக்கு ஒரு படிப்பினை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தெரிவித்திருந்தார்.

அதற்கேற்ப முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் இளைஞரணி மாநாடு குறித்து தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், இந்தியாவுக்கு வழிகாட்டும் வகையில் திராவிட மாடல் அரசு செயல்பாடுகள் தொடருவதாகவும், 2024 பாராளுமன்ற தேர்தல் வெற்றி களமாக நிச்சயம் அமைந்திடும் என்றும் சூசகமாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நாளை மதியம் 3 மணிக்கு நடைபெறுவதையொட்டி அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலின்போது ஒவ்வொரு மாநிலத்திலும் பா.ஜனதா கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு முடிந்தவரை கூட்டணி உடன்பாடு செய்து கொள்வது என்றும், பாரதிய ஜனதாவுக்கு எதிராக பொது வேட்பாளர்களை நிறுத்தினால் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யோசனை தெரிவிக்க உள்ளதாக தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அந்தந்த மாநிலங்களில் உள்ள பிரச்சினைகளை மையப்படுத்துவது மட்டுமின்றி அகில இந்திய அளவிலான பொது பிரச்சினைகளில் பாரதிய ஜனதா செய்த தவறுகளை சுட்டிக் காட்டி பிரசாரம் செய்தாலே இந்தியா கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என்ற கருத்தையும் முன்வைக்க உள்ளார். எனவே அதற்கேற்ப அஜண்டா உருவாக்கப்பட வேண்டும் என்றும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்து வார் என்றும் அந்த தி.மு.க. நிர்வாகி தெரிவித்தார்.