டெல்லியில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த சந்திரபாபு நாயுடு!
ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றாததால், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கடந்த ஆண்டு விலகியது.
அதன்பிறகு பாராளுமன்ற கூட்டத்தொடர்களின்போது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்கள், தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து டெல்லியில் சந்திரபாபு நாயுடு இன்று காலை உண்ணாவிரதம் தொடங்கினார். முன்னதாக ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
டெல்லியில் உள்ள ஆந்திரா பவன் வளாகத்தில் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஆந்திர மாநில அரசு பணியாளர்கள் சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் மற்றும் அம்மாநிலத்தின் மாணவர் சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இரவு 8 மணிவரை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.
நாளை (12-ம் தேதி) இதே கோரிக்கையை வலியுறுத்தி ஜனாதிபதியை நேரில் சந்தித்து சந்திரபாபு நாயுடு மனு அளிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.