டெல்லியில் காருடன் இழுத்து செல்லப்பட்டு, இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் குற்றவாளிகள் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் கூறுகையில், கும்பலாக ஆண்கள் சிலர் தங்களது காரின் கீழ் இழுத்துச் சென்றதில் இளம்பெண் உயிரிழந்த விவகாரம் ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்.
குற்றவாளிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். அவர்கள் தூக்கில் போடப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டு கொண்டுள்ளேன். அவர்கள் உயரிய அரசியல் தொடர்பு உள்ளவர்களாக இருப்பினும் இந்த விவகாரத்தில் கருணை காட்டக் கூடாது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கை மூத்த போலீஸ் அதிகாரி ஷாலினி சிங் என்பவரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதேபோல், டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் இந்த சம்பவம் பற்றி தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டதுடன், டெல்லி போலீசாருக்கு நோட்டீசும் அனுப்பி உள்ளார்.