X

டெல்லியில் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள்

விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும், விவசாய விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும், 60 வயது விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய விவசாயிகளின் ஒருங்கிணைப்பு குழு டெல்லியில் நேற்று முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த போராட்ட குழுவில் திருச்சியை சேர்ந்த தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான 1,300 பேர் தமிழகத்தில் இருந்து பங்கேற்று உள்ளனர். அதேபோன்று உத்தரப்பிரதேசம், பீகார், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட 29 மாநில விவசாயிகளும், 4 யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 207 விவசாய சங்கத்தை சேர்ந்த விவசாயிகளும் என மொத்தம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று உள்ளனர்.

நேற்று இவர்கள் டெல்லியில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் மத்திய அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ள அவர்கள் இன்று டெல்லி பாராளுமன்றத்தை நோக்கி பேரணி செல்லப் போவதாக அறிவித்தனர்.

இதற்காக தமிழக விவசாயிகள் 25 பெண்கள் உள்பட 1,300 பேரும் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று காலை 8 மணிமுதல் திரண்டனர். அதேபோன்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் யோகேந்திர யாதவ், தலைமையிலும் மற்ற விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் என லட்சக்கணக்கான விவசாயிகள் திரண்டிருந்தனர்.

எங்கு பார்த்தாலும் பச்சை துண்டுகளுடன் விவசாயிகள் தலைகளாக காணப்பட்டன. இதில் தமிழக விவசாயிகள் 10 மணிக்குள் மத்திய அரசு வந்து கோரிக்கை குறித்து, உறுதி கூறி, நிறைவேற்ற வாக்குறுதி தராவிட்டால் பேரணியில் முழு நிர்வாணமாக செல்வோம் என அறிவித்திருந்ததால் பரபரப்பாக இருந்தது. பேரணி இடத்தில் ஆயிரக்கணக்கான டெல்லி போலீசார் மற்றும் மத்திய ராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு டெல்லி ஆம் ஆத்மி எம். எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்ததோடு, அவர்கள் நேரடியாக வந்து உணவு வழங்கினர். இன்று காலையும் பேரணி தொடங்கும் முன்பு விவசாயிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. தண்ணீர் பாக்கெட்டுகளும் வழங்கப்பட்டது.

ராம்லீலா மைதானமே பரபரப்புடன் காணப்பட்டது. போக்குவரத்து மாற்றப்பட்டது.

தமிழக விவசாயிகள் நிர்வாணமாக பாராளுமன்றம் நோக்கி செல்வோம் என அறிவித்திருந்ததால் டெல்லி போலீசார் அவர்கள் இடத்தில் கூடுதல் போலீசாரை நிறுத்தி இருந்தனர்.

இதுகுறித்து பேரணியில் நின்ற திருச்சி அய்யாக்கண்ணு கூறியதாவது:-

மத்திய அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக விவசாயிகள் ஏற்கனவே டெல்லியில் 141 நாட்கள் போராட்டம் நடத்தினோம். அன்று நாங்கள் தொடங்கிய போராட்டம் இன்று இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகளை டெல்லியில் திரள வைத்துள்ளது.

தமிழக விவசாயிகள் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ராம்லீலா மைதானத்தில் இருந்து பாராளுமன்றம் வரை 3 கி.மீட்டர் நிர்வாணமாக செல்ல உள்ளோம். விவசாயிகளின் வேட்டி, சட்டையை ஏற்கனவே மத்திய அரசு கழற்றிவிட்டது. இப்போது எங்கள் கோவணத்தையும் மத்திய அரசு கோரிக்கையை நிறைவேற்றாததன் மூலம் கழற்றிவிட்டது என்பதை குறிக்கும் வகையில் செல்ல உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.