டெல்லியில் அமைதி திரும்பியது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தும், எதிர்த்தும் டெல்லி வடகிழக்கு பகுதியில் நடந்த போராட்டத்தில் மோதல் ஏற்பட்டு, அது மிகப்பெரிய கலவரமாக வெடித்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மோதிக்கொண்ட இரு தரப்பினரும் கல்வீச்சு, தீவைப்பு, துப்பாக்கி சூடு போன்ற வன்முறையில் ஈடுபட்டனர்.
அடுத்தடுத்து திங்கள், செவ்வாய்க்கிழமைகளிலும் டெல்லி வடகிழக்கின் பல இடங்களில் வன்முறை நீடித்தது. இதில் நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட கார்கள் சேதப்படுத்தப்பட்டு எரித்து நாசம் செய்யப்பட்டன.
300-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்களில் 265 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கலவரத்தில் 2 போலீஸ்காரர்கள் உள்பட 38 பேர் பலியாகி உள்ளனர். துப்பாக்கி குண்டு காயம் அடைந்தவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
கலவரத்தில் அடித்து கொல்லப்பட்டவர்களில் பலரது உடல் சாக்கடை கால்வாய்களில் வீசப்பட்டு இருந்தது. அந்த உடல்கள் அனைத்தும் கடந்த 2 நாட்களாக எடுக்கப்பட்டன. வேறு எங்காவது உடல்கள் வீசப்பட்டுள்ளதா? என்று வடகிழக்கு டெல்லி சாக்கடை கால்வாய்களில் தேடும் பணி நடந்து வருகிறது.
கலவரம் தொடர்பாக டெல்லி வடகிழக்கு பகுதி போலீசார் 48 வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். வன்முறையில் ஈடுபட்டவர்களில் நேற்றிரவு வரை 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலரை போலீசார் தேடிவருகிறார்கள்.
இதற்கிடையே 400 பேரை டெல்லி போலீசார் பிடித்து தடுத்து வைத்துள்ளனர். அவர்களிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் வன்முறை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
சுமார் 50 கம்பெனி துணை நிலை ராணுவ வீரர்கள் டெல்லி வடகிழக்கு பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக அவர்கள் ரோந்து பணியிலும், கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் டெல்லி போலீசாரும் ஒருங்கிணைந்து ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர்.
டெல்லி வடகிழக்கு பகுதியில் 144 தடை உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) அந்த தடை உத்தரவு சுமார் 10 மணி நேரத்துக்கு மட்டும் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த 144 தடை உத்தரவை மீறி தெருக்களில் குழுக்களாக திரண்டு வந்தாலோ அல்லது வன்முறையில் ஈடுபட்டாலோ கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக புதிதாக எந்த வன்முறையும் ஏற்படவில்லை. டெல்லி வடகிழக்கு பகுதியில் மயான அமைதி நிலவுகிறது. இன்று கலவரம் பகுதியில் முழு அமைதி திரும்பியது.
அமைதி வந்து விட்ட போதிலும் டெல்லி வடகிழக்கு பகுதிகளில் மக்கள் மத்தியில் ஒருவித பயமும் பதட்டமும் நீடித்தப்படிதான் உள்ளது. பல இடங்களில் மக்கள் தொடர்ந்து வீடுகளுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். சில பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையை பயன்படுத்தி பல கடைக்காரர்கள் அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்றனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்கள் சப்ளை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கலவர பகுதிகளில் மெல்ல, மெல்ல இயல்பு நிலை திரும்ப தொடங்கியுள்ளது.
இதற்கிடையே டெல்லி கலவரத்தின் பின்னணியில் மிகப்பெரிய சதியும், சதி திட்டங்களும் அரங்கேற்றப்பட்டு இருப்பதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கலவரம் நடந்த பகுதியில் ஒரு வீட்டில் இருந்து நூற்றுக்கணக்கான கையெறி குண்டுகள், வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அந்த கையெறி குண்டுகள் நீண்ட கயிறுகளில் கட்டி வீச தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. பாட்டில் பெட்ரோல் குண்டுகளும் ஏராளமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் ஓரிரு நாட்களில் தயாரித்து விட முடியாது என்று தெரியவந்துள்ளது.
எனவே திட்டமிட்டு கலவரத்தை நடத்த யாருடைய தூண்டுதலின் பேரிலேயோ இந்த கையெறி குண்டுகள் தயார் செய்து வைக்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. ஏராளமான வெடிமருந்துகளும் சிக்கி இருப்பதால் சதி திட்டத்தின் பின்னணியில் மிகப்பெரிய நாசவேலை நோக்கம் இருந்திருக்கும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
இதையடுத்து டெல்லி கலவரம் குறித்து விசாரிக்க சிறப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவர்கள் அதிரடி விசாரணையை தொடங்கியுள்ளனர். கலவரத்தை தூண்டி விட்டவர்களை வேட்டையாட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கலவரத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் முழு செலவையும் மாநில அரசே ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.