X

டெல்லியில் அமைக்கப்பட்ட முதல் புகை கோபுரம் – முதலமைச்சர் கெஜ்ரிவால் திறந்து வைத்தார்

டெல்லியில் காற்று மாசு பிரச்சினை நீண்ட காலமாக உள்ளது. பக்கத்து மாநிலங்களில் உள்ள விவசாயிகள், பயிர் கழிவுகளை எரிப்பதால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. இதை போக்க புகை கோபுரங்கள் அமைக்குமாறு டெல்லி அரசுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, புகை கோபுரம் அமைக்கும் திட்டத்துக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லி மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

டெல்லி கன்னாட்பிளேஸ் பகுதியில் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியமும், டெல்லி ஆனந்த் விஹார் பகுதியில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமும் தலா ஒரு புகை கோபுரத்தை அமைத்துள்ளன.

கன்னாட்பிளேஸில், நாட்டிலேயே முதல் முறையாக அமைக்கப்பட்ட புகை கோபுரத்தின் தொடக்க விழா நேற்று நடந்தது. முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இது ஒரு புதிய தொழில்நுட்பம். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்துள்ளோம்.

இந்த கோபுரம், மேலே உள்ள மாசடைந்த காற்றை உறிஞ்சிக்கொண்டு, சுத்தமான காற்றை அடிப்பகுதியில் இருந்து வெளியிடும். விநாடிக்கு ஆயிரம் கனமீட்டர் காற்றை சுத்தப்படுத்தும்.

இதை சோதனைரீதியாக அமல்படுத்துகிறோம். இதன் செயல்பாட்டை நிபுணர்கள் ஆய்வு செய்வார்கள். நல்ல பலன் அளித்தால், டெல்லியில் இன்னும் நிறைய புகை கோபுரங்கள் அமைக்கப்படும்.

பலன் அளிக்காவிட்டால், வேறு தொழில்நுட்பத்தை தேட வேண்டி இருக்கும். இருப்பினும், இத்திட்டம் ஒரு மைல்கல்லாக அமையும் என்று கருதுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த புகை கோபுரம், 24 மீட்டர் உயரம் கொண்டது. ரூ.22 கோடி செலவில் டாடா பிராஜக்ட்ஸ் நிறுவனம் கட்டித் தந்துள்ளது. கோபுரத்தில் 1,200 ஏர் பில்டர்கள் உள்ளன. அவை ஒரு கி.மீ. சுற்றளவில் காற்றை சுத்தப்படுத்தும்.

ஆனந்த் விஹாரில் மத்திய அரசு அமைத்த 25 மீட்டர் உயர புகை கோபுரம், 31-ந் தேதிக்குள் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.