ஷார்ஜாவில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின.
முதலில் பேட் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த டெல்லி அணி 19.5 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.
குறிப்பாக, கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா பந்தை வீசினார். இந்த ஓவரில் டெல்லி அணியின் அக்சர் படேல் 3 சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார். இதனால், சென்னை அணி தோல்வியை சந்தித்தது.
போட்டிக்குப் பிறகு சென்னை கேப்டன் டோனி கூறியதாவது:
பிராவோ உடல் தகுதியுடன் இல்லை. இதனால் களத்தில் இருந்து வெளியேறிய பிராவோ மீண்டும் களத்திற்கு வரவில்லை. இதன் காரணமாகவே ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஷிகர் தவானின் விக்கெட் மிகவும் முக்கியமானது. அவருக்கு சில கேட்ச்களை நாங்கள் தவறவிட்டோம். ஷிகர் தவான் எப்போதுமே நல்ல ஸ்டிரைக் ரேட்டை கொண்டு செல்வார். எனவே அவரது விக்கெட் மிக முக்கியமானது. அதேபோல், முதல் இன்னிங்சுக்கும் இரண்டாவது இன்னிங்சுக்கும் பல்வேறு வேறுபாடு இருந்தது. இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் (ஆடுகளம்) பேட்ஸ்மேன்களுக்கு சிறிது ஏதுவாக இருந்தது. எப்படி இருந்தாலும் ஷிகர் தவான் சிறப்பாக பேட்டிங் செய்தார் என தெரிவித்தார்.