டெல்டா வைரஸ் வரும் மாதங்களில் ஆதிக்கம் செலுத்தும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
உலகை அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரசின் புதிய மாறுபாடு ‘பி.1.617.2.’ ஆகும்.
இது டெல்டா வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் முதன்முதலாக காணப்பட்ட இந்த வைரஸ் இப்போது உலகமெங்கும் கால் பதித்து பரவி வருகிறது.
இந்த வைரஸ் இனி வரும் மாதங்களில் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு, தனது கொரோனா வாராந்திர தொற்றுநோய் புதுப்பிப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
டெல்டா வைரஸ் பாதிப்பினை 96 நாட்கள் தெரிவித்துள்ளன. இதன் மாறுபாடுகளை அடையாளம் காணத் தேவையான வரிசை முறை திறன்கள் குறைவாக இருப்பதால், இது குறைத்து மதிப்பிடப்படுகிறது.
இந்த நோய்த் தொற்று, பல நாடுகளில் தொற்று பரவல் அதிகரிப்புக்கும், ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் சேர்க்கை அதிகரிப்புக்கும் காரணம் ஆகும்.
இந்த வைரஸ் பரிமாற்றத்தின் அதிகரிப்பு காரணமாக டெல்டா வைரஸ் மற்ற வகைகளுடன் போட்டியிட்டு, இனி வரும் மாதங்களில் ஆதிக்கம் செலுத்தும்.
கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடுவதற்கு தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள், தனிநபர் இடைவெளி பராமரிப்பு, சமூக அளவிலான கட்டுப்பாடுகள், தொற்று தொடக்கம் முதல் இருந்து வரும் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அம்சங்கள் ஆகியவை கொரோனா வைரஸ் உள்ளிட்ட கவலைக்குரிய வகைகளுக்கு எதிராக வலுவாக செயல்படும்.
புதிய வகையான கவலைக்குரிய வைரஸ்களின் அதிவேக பரிமாற்றத் தன்மை என்பது நீண்ட காலத்துக்கு நடவடிக்கைகளை பராமரித்து வர தேவையாக இருக்கலாம். குறிப்பாக குறைந்த தடுப்பூசி பாதுகாப்பு சூழலில், மேற்கூறிய பிற நடவடிக்கைகள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும்.