மதுரை ஒத்தக்கடையில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணையும் விழா நடந்தது.
அ.தி.மு.க. ஆட்சி தற்போது 2 பணிகளை செய்து கொண்டிருக்கிறது. ஒன்று அரசாங்கத்தின் பெயரில் கடன் வாங்குவது. மற்றொன்று கடன் வாங்கிய பணத்தை கொள்ளையடிப்பது. இந்த பணிகளில் தான் அவர்கள் சாதனை படைத்திருக்கிறார்கள்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அண்மையில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை மூலம் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது தெரிய வருகிறது.
கடந்த ஆண்டு 8.1 சதவீதமாக இருந்த வளர்ச்சி தற்போது 7.2 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஆட்சி முடிவடையும் நேரத்தில் ஜெயலலிதா மீது முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் அக்கறை வந்துள்ளது. அவரது பிறந்தநாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை. பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாகி உள்ளனர்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
இவற்றையெல்லாம் திசை திருப்ப முதல்- அமைச்சர் விவசாயி அவதாரம் எடுக்கிறார். அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்டுள்ள சேலம் 8 வழிச் சாலை, ஹைட்ரோகார்பன் திட்டம் என அனைத்து திட்டங்களிலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு அண்மையில் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளது. ஆனால் அது தொடர்பான கொள்கை முடிவு இல்லை. மத்திய அரசிடம் இதற்கு அனுமதி பெறவில்லை. இது தொடர்பான கேள்விகளுக்கும் மத்திய அரசு அனுமதி அளிப்பதில்லை.
இதிலிருந்தே வேளாண் சிறப்பு மண்டல அறிவிப்பு தமிழக மக்களை மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து நடத்தும் கபட நாடகம் என்பதை புரிந்து கொள்ளலாம்.
தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.