Tamilசெய்திகள்

டெல்டா மாவட்டங்களில் மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த அறிக்கை – முதலமைச்சரிடம் நாளை வழங்கப்படுகிறது

தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் பயிரிடப்பட்ட விவசாய பயிர்கள் மழைநீரில் மூழ்கி கிடக்கின்றன.

சேதம் அடைந்த விவசாய பயிர்களை காப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும், பயிர் சேத விவரங்களை அறியவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 7 அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்து இருந்தார்.

இந்த குழுவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இந்த குழுவினர் டெல்டா மாவட்டத்தை பார்வையிட கடந்த 12-ந்தேதி சென்றிருந்தனர்.

முதலில் தஞ்சாவூர் சென்ற 7 அமைச்சர்களும் அங்கு கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்கள். மாவட்டத்தில் நெற்பயிர்கள் உள்ளிட்ட பயிர் வகைகள் எவ்வளவு ஹெக்டேரில் பயிரிடப்பட்டு இருந்தது? அதில் எவ்வளவு சேதம் அடைந்துள்ளது? என்ற விவரங்கள் குறித்து துறை அதிகாரிகளுடன் விரிவாக விவாதித்தனர்.

அதன் பிறகு விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசித்தனர். இதில் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு ஹெக்டேர் பயிர்கள் சேதம் அடைந்தது? என்ற விவரங்களை கேட்டு அறிந்தனர்.

அதன் பிறகு நீரில் மூழ்கிக்கிடந்த நெற்பயிர்களையும் நேரில் பார்வையிட்டனர். அங்குள்ள பெரியக்கோட்டை பகுதியில் மழைநீரில் மூழ்கிக்கிடந்த நெற்பயிர்களை பார்வையிட்டு எந்த அளவுக்கு சேதம் அடைந்துள்ளது? என்பதை வயலில் இறங்கி பார்த்தனர்.

அங்கிருந்த விவசாயிகளிடம் சேத விவரங்களை கேட்டறிந்தனர். இதனை பிறகு திருவாரூர் மாவட்டம் கண்ணுகுடி பகுதிக்கு சென்று அங்கும் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களை பார்வையிட்டனர்.

அதன் பிறகு கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள புழுதிக்குடி பகுதிக்கு சென்று பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் சேத விவரங்களை கேட்டனர். திருத்துறைப்பூண்டி ராயநல்லூர் கிராமத்திலும் மூழ்கிக் கிடந்த நெற்பயிர்களை பார்வையிட்டனர்.

பின்னர் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி அந்த மாவட்ட சேத விவரங்களை கேட்டு அறிந்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் அருந்தவபுலம் பகுதிக்கும் சென்று நீரில் மூழ்கிய பயிர்களை பார்வையிட்டனர்.

விவசாய சங்க பிரதிநிதிகளிடம் பயிர்சேதம் குறித்தும் கேட்டனர். அந்த மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்கள். அரசுத்துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் பாதிப்பு விவரங்களை எடுத்து கூறினார்கள்.

பயிர் சேதங்களை பார்வையிட்ட அமைச்சர்கள் குழுவினர் எவ்வளவு நெற்யிர்கள் சேதம் அடைந்துள்ளது? விவசாயிகளுக்கு உடனடியாக என்னென்ன நிவாரணம் தேவை? என்பது குறித்தும் கேட்டறிந்தனர். இவை அனைத்தையும் விரிவாக ஆய்வு செய்து அறிக்கையாக தயாரித்துள்ளனர்.

ஐ.பெரியசாமி தலைமையிலான 7 அமைச்சர்கள் கொண்ட குழுவினர் சென்னை தலைமை செயலகத்தில் நாளை காலை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பயிர்சேத அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர்.