டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்
நஞ்சை வளம் கொழிக்கும் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விவசாயத்திற்காக சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக ஜூன் 12-ந் தேதிக்கு முன்பாக கடந்த 24-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
இதையடுத்து இந்த தண்ணீர் தஞ்சை மாவட்டம் கல்லணையை வந்தடைந்தது. பின்னர் கடந்த 27-ந் தேதி பாசனத்திற்காக அங்கிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. முன்னதாகவே தண்ணீர் திறக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய விவசாயிகள் முனைப்பு காட்டி வருகின்றனர்.
மேலும் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
அந்த வகையில் டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை தண்ணீர் விரைவாக சென்றடையும் வகையில் ரூ.80 கோடி மதிப்பில் ஆறு, வடிகால் வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகளை முடுக்கி விடப்பட்டன.
இதையடுத்து தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் கலெக்டர்கள் ஆறு, வடிகால் வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகளை எந்திரங்களை கொண்டு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இப்பணிகள் முறையாக நடைபெறுகிறதா என அதிகாரிகள் கொண்டு கண்காணிப்பு பணிகளையும் மேற்கொண்டு உள்ளனர்.
இந்நிலையில் இந்த தூர்வாரும் பணிகளை பார்வையிடுவதற்காக 2 நாள் பயணமாக நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சைக்கு நேற்று மாலை வந்தார். அவர் தஞ்சை அருகே உள்ள கொக்கேரி கிராமத்தில் பீமனோடை வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சென்ற அவர் அங்குள்ள ஒரு ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்தார்.
இதையடுத்து இன்று காலை 2-ம் நாளாக ஆய்வு பணியை தொடங்கினார். இதில் இன்று 4 மாவட்டங்களில் 7 இடங்களில் ஆய்வு மேற்கொள்கிறார்.
அதன்படி முதலாவதாக இன்று காலை 9 மணிக்கு நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கருவேலங்கடையில் உள்ள கல்லாறு வடிகால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்தார். பணிகள் முடிந்துள்ள விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் முடிந்துள்ள விவரங்கள் அடங்கிய புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். அவருக்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் மாவட்டத்தில் ரூ.3.46 கோடியில் 30 பணிகள் நடந்து வருகிறது. இதில் பணி முடிந்துள்ள விவரங்களை எடுத்து கூறினார்.
இதையடுத்து வேளாண்துறை சார்பில் விதைநெல், பூச்சிகொல்லி மருந்து, நாற்றங்கால் உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்த அரங்கை பார்வையிட்டார்.
இதனைதொடர்ந்து வேளாண்துறை சார்பில் 5 விவசாயிகளுக்கு நெல்விதை பவர்டில்லர், தென்னங்கன்றுகள், உளுந்து விதைகள் வழங்கினார். மேலும் ஒரு விவசாயிக்கு டிராக்டர் வழங்கினார்.
அப்போது அங்கு ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் முதல்வரிடம் மனு கொடுக்கவும், குறைகளை தெரிவிக்கவும் கூடியிருந்தனர். அவர்களிடம் மனுக்களை பெற்று கொண்டார்.
அப்போது விவசாயிகள் முதல்வரிடம் கோரிக்கையாக நாகை மாவட்டம் கடைமடை பகுதியாகும். எனவே வெண்ணாறு, காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் கூடுதலாக தடையின்றி தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனை முதல்வர் ஏற்றுக்கொண்டு ஆவண செய்வதாக உறுதி அளித்தார். மேலும் ஒரு மீனவர் எனது படகு எரிந்து விட்டது. எனவே புதிய படகு வாங்க உதவுமாறு கேட்டுகொண்டார். உடனே மு.க.ஸ்டாலின் அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து கூடியிருந்த சிறுவர்களை பார்த்து உங்கள் பெயர் என்ன? என்ன படிக்கிறீர்கள்? என்று கேட்டு நன்றாக படிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். முதியவர்கள் உங்களது ஆட்சி சிறப்பாக உள்ளது என கூறி முதலமைச்சரை வாழ்த்தினர்.
இதையடுத்து காலை 10 மணிக்கு மயிலாடுதுறை மாவட்டம் அனந்தமங்கலம் கிராமத்திற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ள வயல்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் சாகுபடி விவரம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் திருக்கடையூர் அருகே பிள்ளை பெருமாநல்லூர் கிராமத்தின் வழியே செல்லும் ராமச்சந்திரன் வாய்க்கால் 5.60 கி.மீ. தூரம் ரூ. 5 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் தூர்வாரும் பணியையும் ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 49 பணிகள் ரூ.8.70 கோடி மதிப்பில் 862.25 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணிகள் நடக்கிறது.
தூர்வாருவதன் மூலம் இப்பகுதியில் 350 ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அங்கும் விவசாயிகளை சந்தித்த முதல்வர் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இதையடுத்து நல்லாடை கிராமம் தில்லையாடி அறும்பாக்கம் பகுதியில் நெல் எந்திர நடவு பணியை பார்வையிட்டார். அப்போது விவசாயிகளிடம் தண்ணீர் கடைமடை வரை தடையின்றி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே குறுவை சாகுபடியை உற்சாகமாகவும், நம்பிக்கையுடன் மேற்கொள்ளுங்கள் என்று கூறினார்.
டெல்டா மாவட்டத்துக்கு ஆய்வு பணிக்காக 2 நாள் பயணமாக வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 4 மாவட்டங்களிலும் சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.