டெல்டா பிளஸ் வைரஸ் எதிரொலி! – புனேவில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது

புனேயில் கொரோனாவின் 2-வது அலை தாக்கம் குறைந்து வரும் நிலையில், கடந்த சில தினங்களாக டெல்டா பிளஸ் என்ற உருமாறிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக புனே மாவட்டத்தில் தளர்வுகள் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. மாலை 5 மணிக்கு பிறகு புனேயில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து புனே மாநகராட்சி கமிஷனர் விக்ரம் குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“நாளை (திங்கட்கிழமை) முதல் புனே நகரில் மாலை 5 மணி வரை 5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும். இந்த நேரத்தில் அவசர காலத்திற்கு மட்டும் ஒருவர் மட்டும் வெளியே செல்ல முடியும்.

அத்தியாவசிய கடைகள் வாரத்தின் அனைத்து நாட்களும் மாலை 4 மணி வரை திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. மற்ற கடைகள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 4 மணி வரை திறந்து இருக்கும். வார இறுதி நாட்களில் மூடப்படும். மால்கள், தியேட்டர்கள், முற்றிலும் அடைக்கப்பட்டு இருக்கும். உணவங்கள், மதுபான பார்கள், ஓட்டல்கள் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4 மணி வரை 50 சதவீத இருக்கையுடன் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதன்பின் பார்சல் சேவைக்கு இரவு 11 மணி வரை செயல்படும்.

மேலும் ரெயில் ஊழியர்கள், மருத்துவசேவைகள், அரசு ஊழியர்கள், விமான நிலைய சேவைகள், துறைமுக பணியாளர்கள் மட்டும் பொது போக்குவரத்தில் செல்ல அனுமதி அளிக்கப்படும். புனே மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதல் வாரம் முழுவதும் அதிகாலை 5 மணி முதல் காலை 9 மணி வரையில் தொடரும். தனியார் அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்களுடன் மாலை 4 மணி வரையில் பணியாற்றி கொள்ளலாம்.

அரசு அலுவலகங்கள், அத்தியாவசிய சேவைகள் 100 சதவீதம் இயங்கும். சமூக நலக்கூட்டங்கள், திருமணங்கள் மாலை 4 மணி வரையில் 50 பேர் மட்டும் கலந்து கொள்ளலாம். இதைத்தவிர திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரையில் மாலை 4 மணி வரையில் மதுபான கடைகள் திறந்து இருக்கும். வார இறுதி நாட்களில் வீட்டிற்கு பார்சல் வழங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.”

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools