டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா, ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டியில், கொரோனா நோய் தடுப்புக்கு மாறுபட்ட 2 தடுப்பூசிகளை போட்டுக்கொள்வது நல்லதா? என்ற கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தொற்று நோய்களுக்கு மாறுபட்ட 2 தடுப்பூசிகளை போடும் நடைமுறை முன்பே உள்ளது. முதல் ஊசியை தொடக்க ஊசியாகவும், 2-வது ஊசியை செயல்திறன் ஊக்குவிப்பாகவும் போட்டுக்கொள்ளலாம். எபோலா வைரஸ் போன்ற தொற்றுநோய்களுக்கு இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு உள்ளது. தற்போது கொரோனா நோய் தடுப்புக்கும் இதுபோன்ற சோதனையை பல நாடுகள் அனுமதித்து உள்ளன.
டெல்டா, டெல்டா பிளஸ் போன்ற மாறுபட்ட கொரோனா தொற்றை எதிர்த்து போராட 2 கலப்பு ஊசிகள் சாத்தியமானதாக இருக்கலாம். அதே நேரத்தில் இருவேறு ஊசிகளை பயன்படுத்தினால் அதிக பக்கவிளைவுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே இதுபற்றி முடிவு எடுப்பதற்கு கூடுதல் தரவுகள் தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், இந்தியாவில் டெல்டா, டெல்டா பிளஸ் கொரோனா தொற்றுகள் 3-வது அலை உருவாவதற்கான சாத்தியக்கூறுகளாக இருக்கலாம் என்றும், ஆனால் 2-வது அலையை போன்று 3-வது அலை மிக கடுமையானதாக இருக்காது என்று கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.