டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்சி நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 24-ந் தேதி வரை நடக்கிறது. இதில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரும், உலக சாம்பியனுமான இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து கலந்து கொள்கிறார். கடந்த ஆகஸ்டு மாதம் முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு சிந்து பங்கேற்கும் முதலாவது போட்டி இது என்பதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் சிந்து, துருக்கி வீராங்கனை நீஸ்லிஹன் யிஜித்துடன் மோதுகிறார். கடந்த வாரம் நடந்த உபேர் கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தில் காயம் அடைந்ததால் வெளியேறிய இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தனது முதல் ஆட்டத்தில் ஜப்பானின் அயா ஒஹோரியுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் லக்ஷயா சென், சவுரப் வர்மா, ஸ்ரீகாந்த், சாய் பிரனீத், சமீர் வர்மா, காஷ்யப் ஆகியோரும், இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சிராக் ஷெட்டி-சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, சிக்கி ரெட்டி-அஸ்வினி ஜோடியும் இந்த போட்டியில் களம் காணுகிறது.