டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்தது ஆஸ்திரேலியா

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று போட்டி அமைப்பு குழுவினரும், அந்த நாட்டு அரசாங்க அதிகாரிகளும் உத்தரவிட்டுள்ளனர்.

எனினும் டென்னிஸ் உலகின் நம்பர் ஒன் வீரருமான 9 முறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்  கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாரா? இல்லையா? என்பது குறித்து தெரிவிக்க தொடர்ந்து மறுத்து வந்தார்.  இதனால் ஆஸ்திரேலிய ஓபனில் அவர் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. அவர் போட்டியில் இருந்து விலகக்கூடும் என்றும் தகவல் வெளியாகின.

இதற்கிடையே கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் தனக்கு மருத்துவ விதிவிலக்கு கிடைத்து இருப்பதாகவும், இதனால் ஆஸ்திரேலியாவுக்கு கிளம்பி விட்டதாகவும் அவர் டுவிட்டரில் தெரிவித்து இருந்தார்.

இந்த விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய விரும்பும் யாராக இருந்தாலும் தேவையான கொரோனா தடுப்பு நடைமுறைகளை நிச்சயம் கடைப்பிடித்தாக வேண்டும். ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி போடாமல் இருந்தால், அதற்கான தகுதி வாய்ந்த மருத்துவ சான்றிதழை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக சென்ற ஜோகோவிச்சை விமானம் மூலம் மெல்போர்னின் துல்லாமரைன் விமான நிலையத்தை புதன்கிழமை இரவு வந்தடைந்தார்.

மருத்துவ விலக்குகளை அனுமதிக்காத விசாவிற்கு அவரது குழு விண்ணப்பித்திருப்பது தெரியவந்த பிறகு,  ஆஸ்திரேலிய நாட்டிற்குள் நுழைய அனுமதிக்காகக்  அவர் காத்திருந்தார். ஆனால் அவரை ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய விமான நிலைய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.  கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை சுட்டிக் காட்டி அவருக்கான அனுமதி மறுக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய தேவையான பூர்த்தி செய்த ஆதாரங்களை வழங்க தவறியதால் ஜோகோவிச் விசா ரத்துச் செய்யப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் தெரிவித்துள்ளார்.  இதனையடுத்து இரவு முழுவதும் மெல்போர்ன் விமான நிலையத்தில் நோவாக் ஜோகோவிச்  சிக்கித் தவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools