Tamilவிளையாட்டு

டி20 தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்த விராட் கோலி, ரோகித் சர்மா

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் விராட் கோலி, ரோகித் சர்மா. சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் (50 ஓவர்) இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

2022-ம் ஆண்டு அக்டோபர்- நவம்பரில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு இருவரும் 20 ஓவரில் விளையாடவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு பிறகு இருவரும் ஆடவில்லை.

9-வது ஐ.சி.சி. 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி ஜூன் 4 முதல் ஜூன் 30 வரை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. இந்த போட்டியில் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் இளம் வீரர்களான சுப்மன் கில், ஜெய்ஷ்வால், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங் ஆகியோர் 20 ஓவர் போட்டியில் அதிரடியாக விளையாடி வருகிறார்கள். இதனால் விராட் கோலிக்கும், ரோகித் சர்மாவுக்கும் 20 ஓவர் உலக கோப்பையில் வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் 20 ஓவர் உலகக் கோப்பையில் விளையாட விராட் கோலி, ரோகித் சர்மா ஆர்வத்துடன் விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்காக 30 இளம் வீரர்களை பி.சி.சி.ஐ. அடையாளம் கண்டுள்ளது. இந்திய அணி மற்றும் ஐ.பி.எல்.லில் அவர்கள் முத்திரை பதித்தவர்கள் ஆவார்கள். விராட் கோலியும், ரோகித்தும் 20 ஓவரில் ஓய்வு முடிவை அறிவிப்பார்கள் என்று பி.சி.சி.ஐ. கருதி வந்த நிலையில் இருவரும் உலகக் கோப்பையில் விளையாடும் விருப்பத்தை வெளியிட்டு உள்ளனர்.

இதன்காரணமாக ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்த அணியை தேர்வு செய்வதில் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு குழப்பத்தில் உள்ளது. இது தொடர்பாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட், டெஸ்ட் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருடன் தேர்வுகுழு ஆலோசனை நடத்த உள்ளது.

தேர்வு குழு உறுப்பினர்கான சிவசுந்தர் தாஸ், சலீல் அங்கோலா ஆகியோர் தென்ஆப்பிரிக்காவில் உள்ளனர். தேர்வு குழு தலைவரான அஜித் அகர்கர் அவர்களுடன் இணைந்தார். அவர்கள் 3 பேரிடமும் பேசுகிறார்கள். இதன் பிறகே ஆப்கானிஸ்தான் 20 ஓவர் தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படும்.

விராட் கோலியும், ரோகித் சர்மாவும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 20 ஒவர் தொடரில் ஆடுவார்களா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஏனென்றால் ஜனவரி 25-ந்தேதி இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டிகள் ஜனவரி 11, 14 மற்றும் 17-ந்தேதிகளில் மொகாலி, சங்கர்பூர் (மேற்கு வங்காளம்), பெங்களூரில் முறையே நடக்கிறது.