Tamilவிளையாட்டு

டி20 கேப்டன்களில் ஹர்திக் பாண்ட்யா புதிய சாதனை

இந்திய அணி ஹர்திக் பாண்ட்யா தலைமையில் இரண்டு டி20 கொண்ட தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்து சென்றுள்ளது. முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக ஆட்டம் 12 ஓவராக குறைக்கப்பட்டது.

முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 12 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 9.2 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய டி20 அணியில் இதுவரை ஹர்திக் பாண்ட்யாவுடன் சேர்த்து 9 கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஹர்திக் பாண்ட்யா சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளார்.

டி20 போட்டியில் விக்கெட் எடுத்த முதல் இந்திய அணியின் கேப்டன் என்ற சாதனையை ஹர்திக் பாண்ட்யா படைத்துள்ளார். டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர்கள் பட்டியலில் ஷேவாக், எம்எஸ் டோனி, சுரேஷ் ரெய்னா, ரகானே, விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

இந்திய அணி ஷேவாக் தலைமையில் முதல் டி20 போட்டியில் விளையாடியது. அதிக போட்டியில் கேப்டனாக இருந்தவர்களில் எம்.எஸ்.டோனி முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.