டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் சாதனையை முறியடித்த இந்திய அணி
நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்தது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுவதுமாக கைப்பற்றியது. இதனையடுத்து இந்திய அணி இளம் வீரர்களுடன் டி20 தொடரில் பங்கேற்றது.
முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணியும் 2-வது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று தொடர் சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி நேற்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய இளம் படை அதிரடியாக விளையாடி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் எடுத்தது.
235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி, இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 12.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 66 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது.
இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது. 2018-ல் சர்பராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் 143 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியிருந்தது. இதனை தற்போது இந்திய அணி முறியடித்துள்ளது. ஆட்ட நாயகனாக சுபமன் கில்லும் தொடர் நாயகனாக ஹர்திக் பாண்ட்யாவும் தேர்வு செய்யப்பட்டனர்.