டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த குல்தீப் யாதவ்

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டி2 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. முதல் கட்டமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்தது. முதல் போட்டி மழையால் முழுவதுமாக தடைப்பட்டது.

2-வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் நடந்தது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 13.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

இந்த போட்டியில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். அதோடு, தனது 29-வது பிறந்தநாளில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் எந்த பந்து வீச்சாளரும் செய்யாத உலக சாதனை ஒன்றை அவர் நிகழ்த்தியுள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் பிறந்தநாளில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஒரே பவுலர் என்ற உலக சாதனையை இந்திய பவுலர் குல்தீப் யாதவ் நிகழ்த்தியுள்ளார்.

குல்தீப் யாதவ் 2.5 ஓவர்கள் மட்டுமே வீசியுள்ளார். கடைசி 7 பந்தில் மட்டுமே 4 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 17 ரன்கள் விட்டுக் கொடுத்த அவர் 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதற்கு முன்னதாக இலங்கை வீரர் வணிந்து ஹசரங்கா இந்தியாவிற்கு எதிரான டி20 போட்டியில் தனது பிறந்தநாளில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார். இந்த சாதனையை குல்தீப் யாதவ் முறியடித்துள்ளார். இதே போன்று கடந்த 2018-ம் ஆண்டு மான்செஸ்டரில் இங்கிலாந்திற்கு எதிரான டி20 போட்டியில் 24 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports