Tamilவிளையாட்டு

டி20 உலக கோப்பை – நாளை இந்தியா, அமெரிக்கா மோதல்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அயர்லாந்து அமெரிக்கா, கனடா ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தியது. 2-வது போட்டியில் பாகிஸ்தானை 6 ரன்னில் வென்றது.

இந்திய அணி 3-வது ஆட்டத்தில் போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான அமெரிக்காவை நாளை (12-ந் தேதி) எதிர்கொள்கிறது. இந்த போட்டி நியூயார்க்கில் உள்ள நசாவு ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணி அமெரிக்காவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் சூப்பர்-8 சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

அயர்லாந்துக்கு எதிராக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. பாகிஸ்தான் போட்டியில் பேட்டிங் மிகவும் ஏமாற்றத்தை அளித்தது. ரிஷப் பண்ட் ஒருவரே தாக்கு பிடித்து ஆடினார். அபாரமான பந்துவீச்சால் வெற்றி கிடைத்தது. கிட்டத்தட்ட தோற்க வேண்டிய ஆட்டத்தில் வெற்றி அமைந்தது. அமெரிக்க அணி பாகிஸ்தானை வீழ்த்தி இருந்ததால் மிகவும் கவனமுடன் விளையாட வேண்டும்.

நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீராட் கோலி 2 ஆட்டத்திலும் தொடக்க வரிசையில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால் ரோகித் சர்மாவுடன், ஜெய்ஷ்வால் தொடக்க வீரராக ஆடலாம். கோலி மிடில் வரிசையில் களம் இறங்கலாம். ஷிவம் துபே கழற்றி விடப்படலாம்.

சூர்ய குமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா ஆகியோர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. 2 ஆட்டத்திலும் வெற்றியை பெற்றதால் மாற்றம் செய்ய அணி நிர்வாகம் விரும்பாது. பந்துவீச்சில் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா , அக் ஷர் படேல் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.இதனால் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம்.

இந்தியாவை போலவே மோனக் படேல் தலைமையிலான அமெரிக்க அணியும் முதல் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்று உள்ளது. கனடாவை 7 விக்கெட் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை சூப்பர் ஓவரிலும் வீழ்த்தி இருந்தது. இந்தியாவுக்கு எல்லா வகையிலும் சவால் கொடுத்து அமெரிக்கா விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மா அணிக்கு அதிர்ச்சி கொடுத்து ஹாட்ரிக் வெற்றியை பெறும் வேட்கையில் அந்த அணி உள்ளது.