டி20 உலக கோப்பை தொடர் – இந்திய அணியில் இடம் பிடிக்க முகமது ஷமி, தீபக் சாகருக்கு இடையே கடும் போட்டி
இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. திருவனந்தபுரத்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 2-வது போட்டி நாளை மறுநாள் கவுகாத்தியில் நடக்கிறது.
இந்த நிலையில் காயம் காரணமாக விலகியுள்ள பும்ராவுக்கு பதில் தென் ஆப்பிரிக்கா தொடரில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் இந்திய அணியில் சேர்க்கப் பட்டுள்ளார். இதனை இன்று இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெற்றிருந்தார்.
முதுகுவலி பிரச்சினையால் அவதிப்பட்ட பும்ரா ஆசிய கோப்பை போட்டியில் விளையாடவில்லை. அதன்பின் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 20 ஓவர் தொடரில் விளையாடினார். இந்த நிலையில் முதுகுவலி காயம் காரணமாக பும்ரா, 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு ஸ்கேன் செய்ததில் முதுகில் உள்ள எலும்பில் அழுத்தத்தினால் முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் அவர் சில மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. இதன் காரணமாக அவர் உலக கோப்பையில் விளையாட வாய்ப்பு இல்லை. தற்போது அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழுவின் கண்காணிப்பில் உள்ளார்.
பும்ரா விலகுவதால் அவருக்கு பதில் உலக கோப்பை போட்டியில் இந்திய அணியில் இடம்பிடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது மாற்று வீரர்களாக வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது ஷமி, தீபக் சாகர், சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய், பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் இடம் பெற்றனர்.
தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்து வரும் 20 ஓவர் போட்டிக்கான அணியில் முகமது ஷமி இடம் பெற்றிருந்தார். ஆனால் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடையாததால் அத் தொடரில் இருந்து விலகினார். தென் ஆப்பிரிக்கா தொடரில் தீபக் சாகர் விளையாடி வருகிறார். இவர்களில் ஒருவர் பும்ராவுக்கு பதில் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இருவர் இடையே போட்டி நிலவுகிறது. இதில் தீபக் சாகருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதே வேளையில் உலக கோப்பை இந்திய அணியில் முகமது ஷமியை தேர்வு செய்யாததற்கு பல முன்னாள் வீரர்கள் அதிருப்தி தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.