13-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை கடந்த மார்ச் 29-ந் தேதி முதல் மே மாதம் 23-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது.
கொரோனா வைரஸ் காரணமாக இந்த போட்டியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) காலவரையின்றி ஒத்திவைத்தது. இதன் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல்.போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது.
ஐ.பி.எல். போட்டி ரத்து செய்யப்பட்டால் கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். இதனால் இந்த போட்டியை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் பி.சி.சி.ஐ. இருக்கிறது.
20 ஓவர் உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டி தள்ளி வைக்கப்படும் போது அந்த காலகட்டத்தில் ஐ.பி.எல்.லை நடத்த முடிவு செய்து உள்ளது.
செப்டம்பர் 25-ந் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தள்ளி வைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளன. ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்தினால் வருவாய் கிடைக்காது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கருதுகிறது. மேலும் உலகக்கோப்பையை விட இந்திய அணி டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்வதைத்தான் விரும்புகிறது. ஏனென்றால் இந்த தொடர் மூலம் அதிக வருவாய் கிடைக்கும்.
இதன் காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உலககோப்பை நடத்துவதில் விருப்பமில்லாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஐ.பி.எல். போட்டிக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிகிறது. இதனால் இந்த போட்டி 2 ஆண்டுக்கு தள்ளி வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வருகிற 28-ம் தேதி முடிவு செய்கிறது.
இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டிக்காக உலகக் கோப்பையை தள்ளிவைக்க இந்தியா நெருக்கடி கொடுத்துள்ளதாகவும், பி.சி.சி.ஐ. அதன் செல்வாக்கை பயன்படுத்தி வருவதாகவும் ஆஸ்திரேலிய மீடியாக்கள் செய்தி வெளியிட்டன.
ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் ஐ.பி.எல். போட்டிக்காக உலகக்கோப்பையை தள்ளி வைக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.
இதற்கிடையே ஐ.பி.எல். போட்டிக்காக உலககோப்பையை தள்ளிவைக்க எந்த வித நெருக்கடியும் கொடுக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துள்ளது.
இது தொடர்பாக பி.சி.சி.ஐ. பொருளாளர் அருண் துமால் கூறியதாவது;-
ஐ.சி.சி கூட்டத்தில் 20 ஓவர் உலக கோப்பையை நடத்த என்னென்ன வாய்ப்பு உள்ளது என ஆராய உள்ளோம். அப்படி இருக்கும் போது அந்தப் போட்டியை தள்ளி வைக்குமாறு ஐ.சி.சி.க்கு ஏன் பி.சி.சி.ஐ. ஆலோசனை வழங்க வேண்டும். ஐ.பி.எல் போட்டியை நடத்துவதற்காக இத்தகைய முயற்சியில் ஒருபோதும் பி.சி.சி.ஐ ஈடுபடாது. எந்தவித அழுத்தமும் கொடுக்கமாட்டோம்.
ஆஸ்திரேலிய அரசு போட்டியை நடத்தலாம் என்று முடிவெடுத்தால் அதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் இருக்கிறது. பல்வேறு அணிகளை அனுமதிக்குமா, ரசிகர்கள் இல்லாமல் போட்டி நடத்தலாமா? என்பது குறித்து அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இதில் பி.சி.சி.ஐ .எந்த கருத்தும் தெரிவிக்காது
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அருண்துமால் கூறும் போது, “இந்திய அணி ஆகஸ்ட் மாதம் தென் ஆப்பிரிக்கா செல்வதை இதுவரை உறுதிப்படுத்தவில்லை” என்றார்.