டி20 உலக கோப்பை கிரிக்கெட் – வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா வெற்றி

டி20 உலகக்கோப்பையில் நேற்றைய சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்தியா – வங்காளதேசம் அணிகள் மோதின. இப்போட்டியில் கட்டாயம் வெற்றி வெறவேண்டிய நெருக்கடியுடன் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது.

185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வங்காளதேசம் 7 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் குவித்த நிலையில், திடீரென மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் தடைபட்டது. அப்போது வங்காளதேசம் வெற்றிபெற 78 பந்துகளில் 119 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. லித்தன் தாஸ் 59 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

சில நிமிடங்களுக்கு பின் மழை நின்றதையடுத்து ஆட்டம் தொடங்கியது. அதேவேளை, மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டது. டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி, வங்காளதேச அணி 16 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது. வங்காளதேச அணி ஏற்கனவே 7 ஓவரில் 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்னும் 54 பந்துகளில் 85 ரன்கள் எடுக்கவேண்டும். அதேசமயம் இந்திய அணி வங்காளதேசத்தின் விக்கெட்டுகளை வீழ்த்தவேண்டிய கட்டாயத்தில் பந்துவீசத் தொடங்கியது.
இலக்கை நோக்கி வங்காளதேச அணி அதிரடியாக ஆடியது. லித்தன் தாஸ் 60 ரன்களில் ரன் அவுட் ஆனார். அதன்பின்னர் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. கடைசி இரண்டு ஓவர்களில் 31 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆட்டம் பரபரப்பானது.

ஹர்திக் வீசிய 15வது ஓவரில் 11 ரன்கள் எடுக்கப்பட்டது. எனவே, 16வது ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட தஷ்கின் ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தில் சிக்சர் விளாசினார் நூருல். மூன்றாவது பந்தில் ரன் ஏதும் இல்லை. நான்காவது பந்தில் 2 ரன்களே எடுக்க முடிந்தது. 5வது பந்தில் பவுண்டரி அடித்தார். கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். அந்த ஓவரில் மொத்தம் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 16 ஓவர் முடிவில் வங்காளதேசம் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்ததால், இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் குரூப் பி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools