Tamilவிளையாட்டு

டி20 உலக கோப்பை கிரிக்கெட் அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்குகிறது – ஐசிசி அறிவிப்பு

16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு டி20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்த மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஏற்கனவே தேர்வு செய்து வைத்துள்ளது.

டி20 ஓவர் உலக கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்த முடியுமா? என்பது குறித்து சூழ்நிலையை ஆய்வு செய்து முடிவெடுக்க ஜூன் 28-ந் தேதி வரை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு, ஐ.சி.சி. காலஅவகாசம்  அளித்தது. இதற்கிடையே டி20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீகரத்துக்கு மாற்றப்பட இருக்கிறது என்றும் அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் இந்த போட்டி அக்டோபர் 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை நடைபெற இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், டி20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் போட்டிகள் நடைபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.