Tamilவிளையாட்டு

டி20 உலக கோப்பை கிரிக்கெட் – ஸ்காட்லாந்தை வீழ்த்தி அயர்லாந்து வெற்றி

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளன. இதன் முதல் சுற்றில் 8 அணிகள் விளையாடி வருகின்றன. ‘சூப்பர் 12’ சுற்றில் 8 நாடுகள் நேரடியாக விளையாடும். முதல் சுற்றின் மூலம் 4 நாடுகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.

தொடக்க ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள நமீபியா அணி 55 ரன் வித்தியாசத்தில் இலங்கையை அதிர்ச்சிகரமாக வீழ்த்தியது. இதே பிரிவில் நடந்த 2-வது போட்டியில் நெதர்லாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை தோற்கடித்தது.

17 ஆம் தேதி நடந்த  ‘பி’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் ஸ்காட்லாந்து அணி 42 ரன் வித்தியாசத்தில் 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீசை அதிர்ச்சிகரமாக வீழ்த்தியது. இதே பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் ஜிம்பாப்வே 31 ரன்னில் அயர்லாந்தை தோற்கடித்தது. நேற்று முன் தினம் நடந்த ஆட்டங்களில் நெதர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நமீபியாவையும், இலங்கை 79 ரன் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சையும் தோற்கடித்தன.

உலக கோப்பை போட்டியின் 7-வது ஆட்டம் ஹோபர்ட்டில் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில் ‘பி’ பிரிவில் உள்ள ஸ்காட்லாந்து-அயர்லாந்து அணிகள் மோதின. ஸ்காட்லாந்து 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்திலும், அயர்லாந்து முதல் வெற்றி வேட்கையிலும் களத்தில் குதித்தன.

ஸ்காட்லாந்து கேப்டன் ரிச்சி பேரிங்டன் ‘டாஸ்’ வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஸ்காட்லாந்து தொடக்க வீரர் ஜார்ஜ் முன்சே 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். 2-வது விக்கெட்டான மைக்கேல் ஜோன்ஸ்-மேத்யூ கிராஸ் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. 6.5 ஓவரில் அந்த அணி 50 ரன்னை தொட்டது. 9-வது ஓவரில் ஸ்காட்லாந்து அணியின் 2-வது விக்கெட் சரிந்தது. மேத்யூ கிராஸ் 28 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

ஸ்காட்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்தது. மைக்கேல் ஜோன்ஸ் 55 பந்தில் 86 ரன்னும் (6 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் ரிச்சி பேரிங்டன் 27 பந்தில் 37 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

தொடர்ந்து, 177 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி ஆடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக பால் ஸ்டிர்லிங் மற்றும் பால்பிர்னெ களம் இறங்கினர். இதில் பால்பிர்னெ 14 ரன்னுக்குக்ம், ஸ்டிர்லிங் 8 ரன்னுக்கும், அடுத்து வந்த லார்கன் டக்கர் 20 ரன்னுக்கும் ஹேரி டெக்க்ர் 14 ரன்னுக்குக்ம் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதையடுத்து 5வது விக்கெட்டுக்கு கர்டிஸ் காம்பர், ஜார்ஜ் டாக்ரெல் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். அதிரடியாக ஆடிய காம்பர் தனது முதல் அரைசதம் அடித்து அசத்தினார்.

மேலும் இந்த இனை 100 ரன்கள் ‘பார்ட்னர்ஷிப்’ அடித்து அசத்தினர். இறுதியில் அந்த அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் கார்டிஸ் கேம்பர் 72 ரன்னும், டாக்ரெல் 39 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இவர்கள் இருவருக் 5 வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்தனர். இதன் மூலம் அயர்லாந்து அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.