டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற தொடக்க சுற்று போட்டி 2வது ஆட்டத்தில் இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட் அணிகள் விளையாடின. மெல்போர்ன் நகரில் உள்ள கீலாங் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர் பதும் நிசாங்க 60 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். தனஞ்செய டி செல்வா 33 ரன்னும், குசால் மெண்டிஸ் 18 ரன்னும் அடித்தனர். ஐக்கிய அரபு அமீரக அணி சார்பில் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்.
பின்னர் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி வீரர்கள் இலங்கை பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் திணறினர். அடுத்தடுத்து விக்கெட்கள் சாய்ந்த நிலையில் 17.1 ஓவர் முடிவில் அந்த அணி 73 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 79 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
அந்த அணி தரப்பில் துஷ்மந்த சமீர, ஹசரங்க டி சில்வா தலா 3 விக்கெட்களையும், தீக்சனா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். லியனகமகே,தசுன் ஷனக தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.