டி20 உலக கோப்பை கிரிக்கெட் – வங்காளதேசத்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி
டி20 உலக கோப்பையில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ‘குரூப் 12’ முதல் பிரிவில் இடம் பிடித்துள்ள ஆஸ்திரேலியா- வங்காளதேசம் அணிகள் மோதின.
துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வழக்கம்போல் டாஸ் வெல்லும் அணி பந்து வீச்சை தேர்வு செய்வதுபோல், ஆஸ்திரேலிய அணியும் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி வங்காள தேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்காளதேசம் அணி 15 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 73 ரன்னில் சுருண்டது.
தொடக்க வீரர் நைம் 16 பந்தில் 17 ரன்கள் சேர்த்தார். கேப்டன் மஹமதுல்லா 18 பந்தில் 16 ரன்களும், ஷமிம் ஹொசைன் 18 பந்தில் 19 ரன்களும் சேர்த்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றையிலக்க ரன்னில் வெளியேறினர். நான்கு பேர் ரன் கணக்கை தொடங்க முடியாமல் டக்அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர்.
ஆஸ்திரேலியா அணி சார்பில் ஆடம் ஜம்பா 4 ஓவரில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார். ஸ்டார்க், ஹேசில்வுட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 73 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் 14 பந்தில் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அடுத்து மிட்செல் மார்ஷ் களம் இறங்கினார். ஆரோன் பிஞ்ச் அதிரடியாக விளையாடி 20 பந்தில் 4 சிக்ஸ், 2 பவுண்டரியுடன் 40 ரன்கள் விளாசினார். மிட்செல் மார்ஷ் 5 பந்தில் 2 பவுண்டரி, 1 சிக்சருடன் 16 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலியா 6.2 ஓவரில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 78 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.