Tamilவிளையாட்டு

டி20 உலக கோப்பை – ஓமனை வீழ்த்தி ஸ்காட்லாந்து வெற்றி

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடை பெற்று வருகிறது. ஆன்டிகுவாவில் இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்கிய 20-வது லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள ஸ்காட்லாந்து-ஓமன் அணிகள் மோதின.

டாஸ் வென்ற ஓமன் கேப்டன் அக்யூப் இல்யாஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் விளையாடிய ஓமன் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்தது. இதனால் ஸ்காட்லாந்துக்கு 151 ரன் இலக்காக இருந்தது. தொடக்க வீரர் பிரதிக் அதாவாலே 40 பந்தில் 54 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), அயன்கான் 39 பந்தில் 41 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர். ஷப்யான் ஷரீப் 2 விக்கெட்டும், மார்க் வாட், பிரட் வீல், கிறிஸ் சோலே, கிறிஸ் கிரீவ்ஸ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய ஸ்காட்லாந்து அணி 13.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிரண்டன் மெக்முல்லன் 31 பந்தில் 61 ரன்னும் (9 பவுண்டரி, 2 சிக்சர்), ஜார்ஜ் முன்சே 20 பந்தில் 41 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். பிலான் கான், அக்யூப் இல்யாஸ், மெக்ரன் கான் ஆகியோருக்கு தலா 1 விக்கெட் கிடைத்தது.

ஸ்காட்லாந்து பெற்ற 2-வது வெற்றியாகும். அந்த அணி நமீபியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. இங்கிலாந்துடன் மோதிய ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. ஸ்காட்லாந்து 5 புள்ளிகளுடன் ‘பி’ பிரிவில் முன்னிலையில் உள்ளது. அந்த அணி கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை 16-ந்தேதி எதிர்கொள்கிறது.

ஓமனுக்கு 3-வது தோல்வி ஏற்பட்டது. அந்த அணி நமீபியாவிடம் சூப்பர் ஓவரிலும், ஆஸ்திரேலியா விடம் 39 ரன்னிலும் தோற்று இருந்தது. கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்துடன் 14-ந்தேதி மோதுகிறது.