X

டி20 உலக கோப்பை – அயர்லாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

SHARJAH, UNITED ARAB EMIRATES - MARCH 22: Aaron Finch of Australia is congratulated by Shaun Marsh of Australia after reaching his century during the first One Day International match between Pakistan and Australia at Sharjah on March 22, 2019 in Sharjah, United Arab Emirates. (Photo by Francois Nel/Getty Images)

டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா – அயர்லாந்து இடையேயான சூப்பர் 12 சுற்று போட்டி நடைபெற்றது. அரையிறுதிக்கு முன்னேற பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணி நேற்று களமிறங்கியது.
பிரிஸ்பேனில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து கேப்டன் பால்பிர்னி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் வெறும் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஃபின்ச் பொறுப்புடன் நிலைத்து ஆட, மிட்செல் மார்ஷ் 22 பந்தில் 28 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். கிளென் மேக்ஸ்வெல் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார்.

அதன்பின்னர் களமிறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் அடித்து ஆடி அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்த ஆரோன் ஃபின்ச், ௪௪ பந்தில் 63 ரன்கள் அடித்தார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் 25 பந்தில் 35 ரன்கள் அடித்தார். டிம் டேவிட் 10 பந்தில் 15 ரன்களும், மேத்யூ வேட் 3 பந்தில் 7 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 179 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய அணி, 180 ரன்கள் என்ற கடின இலக்கை அயர்லாந்துக்கு நிர்ணயித்தது.

இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து வீரர்கள் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்களை தொடர்ந்து பறிகொடுத்தனர். தொடக்க வீரர்கள் பால் ஸ்டிர்லிங் (11 ரன்கள்), கேப்டன் பால்பிர்னி (6 ரன்கள்) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் தொடர்ந்து விக்கெட்கள் சரிந்தாலும் லோர்க்கன் டக்கர் மட்டும் நிலைத்து நின்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அந்த அணியின் நடுவரிசை வீரர் டெக்டர் 6 ரன்களில் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, கேம்பர் மற்றும் டாக்ரேல், ஸ்டார்க் பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேறினர். சிறப்பாக ஆடிய லோர்க்கன் டக்கர் அரைசதம் கடந்தார். இருப்பினும் இவரின் அதிரடி அயர்லாந்து அணியின் வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை. இறுதியில் அயர்லாந்து 18.1 ஓவர்களில் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது.

லோர்க்கன் டக்கர் 48 பந்துகளில் 71 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி இந்த தொடரில் 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் அந்த அணி குரூப் ஏ புள்ளி பட்டியலில் 5 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அந்த அணியின் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கம்மின்ஸ், ஸ்டார்க், ஜாம்பா, மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.