டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு – முன்னாள் வீரர் சோயிப் அக்தர் விமர்சனம்
8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ந் தேதி முதல் நவம்பர் 13-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான பாகிஸ்தான் அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணி ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது என்று முன்னாள் வேகப்பந்து வீரர் சோயிப் அக்தர் விமர்சனம் செய்து உள்ளார்.
அணி தேர்வு தொடர்பாக தேர்வு குழு தலைவரை அவர் கடுமையாக சாடியுள்ளார். சோயிப் அக்தர் கூறியதாவது:- பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் வரிசை சரியாக இல்லை. இந்த மிடில் ஆர்டர் மூலம் பாகிஸ்தான் முதல் சுற்றிலேயே வெளியேறி விடுமோ என்ற அஞ்சுகிறேன். பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இது கடினமான காலம். இதைவிட சிறந்த பாகிஸ்தான் அணியை தேர்வு செய்து இருக்க வேண்டும். இந்த பாகிஸ்தான் அணி முன்னேற்றம் அடைந்தால் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீரர் முகமது அமீரும் உலக கோப்பைக்கான அணி தேர்வு தொடர்பாக தேர்வு குழு தலைவரை விமர்சித்து உள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறும் போது, ‘தேர்வு குழு தலைவரின் மிகவும் கீழ்த்தரமான தேர்வு’ என்று குறிப்பிட்டு உள்ளார். 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணி கேப்டனாக பாபர் ஆசமும், துணை கேப்டனாக ஷதாப்கானும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அந்த அணி சமீபத்தில் நடந்த ஆசிய இறுதி போட்டியில் இலங்கையிடம் தோற்று சாம்பியன் பட்டத்தை இழந்தது என்பது குறிப்பிடத் தக்கது.