Tamilவிளையாட்டு

டி20 உலகக் கோப்பை – வங்காளதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 21 ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக ஹென்ட்ரிக்ஸ்- டி காக் களமிறங்கினர். ஹென்ட்ரிக்ஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் டிகாக் 18 ரன்னிலும் மார்க்ரம் 4, ஸ்டப்ஸ் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். 44 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த நிலையில் கிளாசன் விக்கெட்டை பறிகொடுத்தார். டேவிட் மில்லர் 38 பந்துகளில் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் தன்சிம் ஹசன் சாகிப் 3 விக்கெட்டும் தம்சிம் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினார். எளிய இலக்கை துரத்திய வங்காளதேசம் அணிக்கு துவக்க வீரர்களான தன்சித் ஹாசன் மற்றும் கேப்டன் நஜ்முல் ஹூசைன் சுமாரான துவக்கம் கொடுத்தனர். இருவரும் முறையே 9 மற்றும் 14 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹாசன் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

இவர்களை தொடர்ந்து களமிறங்கிய தவ்ஹித் மற்றும் மஹ்மதுல்லா பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்தனர். இருவரும் முறையே 37 மற்றும் 20 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த வீரர்களும் ரன் குவிக்க முடியாமல் திணறினர்.

போட்டி முடிவில் வங்காளதேசம் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களை சேர்த்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா சார்பில் கேசவ் மகாராஜ் மூன்று விக்கெட்டுகளையும், ரபாடா, நார்ட்ஜே தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.