டி20 உலகக் கோப்பை தொடரின் 24 ஆவது லீக் போட்டியில் நமீபியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த நமீபியா அணி 72 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நமீபியா வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணியின் கேப்டன் கெர்ஹார்டு எர்சாமஸ் மட்டும் பொறுப்பாக ஆடி 36 ரன்களை சேர்த்தார்.
ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளையும், ஹேசில்வுட், மார்கஸ் ஸ்டொயினிஸ் தலா 2 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் மற்றும் நாதன் எல்லிஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 73 எனும் எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணிக்கு டேவிட் வார்னர் 8 பந்துகளில் 20 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 17 பந்துகளில் 34 ரன்களையும் அடித்தனர். கேப்டன் மிட்செல் மார்ஷ் 18 ரன்களை அடித்தார்.
இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 5.4 ஓவர்களில் 1 விக்கெட் மட்டும் இழந்து 74 ரன்களை குவித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நமீபியா சார்பில் டேவிட் வெய்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினார்.