Tamilவிளையாட்டு

டி20 உலகக் கோப்பை – சூப்பர் 8 போட்டில் அமெரிக்காவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் ஸ்டேஜ் போட்டிகள் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. நேற்று முதல் சூப்பர் 8 போட்டிகள் நடைபெறுகின்றன. நேற்றைய முதல் போட்டியில் அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டி காக் அதிரடியாக விளையாடி 40 பந்தில் 74 ரன்கள் குவித்து அவுட்டானார். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்துள்ளது. கிளாசன் 36 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அமெரிக்கா சார்பில் நேத்ரவால்கர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, அமெரிக்க அணியின் தொடக்க வீரர்களாக டெய்லர் – ஆண்ட்ரிஸ் கௌஸ் களமிறங்கினர். அதிரடியாக விளையாடி டெய்லர் 24 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த நிதிஸ் குமார் 8, ஜோன்ஸ் 0, ஆண்டர்சன் 12, ஷயான் ஜஹாங்கீர் 3 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இந்நிலையில் ஆண்ட்ரிஸ் கௌஸ் மற்றும் ஹர்மீத் சிங் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய ஆண்ட்ரிஸ் கெளஸ் அரை சதம் விளாசினார். அதிரடியாக விளையாடி ஹர்மீத் சிங் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி வரை போராடிய ஆண்ட்ரிஸ் கெளஸ் 81 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில் அமெரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.