X

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் – வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஸ்காட்லாந்து வெற்றி

டி20 உலகக் கோப்பை முதல் சுற்றின் 3-வது ‘லீக்’ ஆட்டம் ஹோபர்ட்டில் இன்று நடைபெற்றது. இதில் ‘பி’ பிரிவில் உள்ள 2 முறை சம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி, ஸ்காட்லாந்து அணியுடன் மோதியது. முதலில் ஆடிய ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய தொடக்க வீரர் ஜார்ஜ் முன்சே 66 ரன்கள் விளாசினார்.

இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக கைல் மேயர்ஸ், இவின் லீஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் மேயர்ஸ் 20 ரன்னுக்கும், இவின் லீவிஸ் 14 ரன்னுக்கும் அடுத்து வந்த பிரண்டன் கிங் 17 ரன்னுக்கும் ஆட்டம் இழந்தனர்.

இதையடுத்து கேப்டன் பூரன், ஷார்மா புருக்ஸ் ஆகியோர் களம் இறங்கினர். ஸ்காட்லாந்து அணியினர் மிகச்சிறப்பாக பந்துவீசி வெஸ்ட் இண்டீஸ் அணியினருக்கு சிக்கல் கொடுத்தனர். பூரன் 4 ரன், புரூக்ஸ் 4 ரன், பவல் 5 ரன், அகைல் ஹோசன் 1 ரன், அல்ஜாரி ஜோசப் 0 ரன் என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அதனால் அந்த அணி 79 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இறுதியில் அந்த அணி 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 118 ரன்களே எடுத்தது. இதன் மூலம் அந்த அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஸ்காட்லாந்து அணி தரப்பில் மார்க் வாட் 3 விக்கெட்டும், பிரெட் வீல், மைக்கேல் லீஸ்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஜோஷ் டாவே, சப்யான் ஷரிப் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக் ஹோல்டர் 38 ரன்கள் எடுத்தார். இரண்டு முறை டி20 உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்காட்லாந்து அணியிடம் வீழந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.