டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் – ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி
8-வது டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நேற்று தொடங்கியது. தகுதிச் சுற்றுப்போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய முஹம்மது வசீம், சிராக் சுரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வசீம் அதிகபட்சமான 41 ரன்களையும், சுரி 12 ரன்களையும் குவித்தார். 7-வது ஓவரில் முதல் விக்கெட்டை பறிகொடுத்த அந்த அணிக்கு காஷிஃப் தாவூத், விர்தியா அரவிந்த் சற்று ஆறுதல் அளித்தது. குறிப்பாக 18-வது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களை சேர்ந்திருந்த ஐக்கிய அரபு அமீரகம், 19-வது ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை மட்டுமே சேர்ந்ததது.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களை மட்டுமே சேர்த்தது. நெதர்லாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக பாஸ் தி லீடே 3 விக்கெட்டுகளையும், ஃபிரட் க்ளாஸன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதைதொடர்ந்து 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர் விக்ரம்ஜித் சிங் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் மேக்ஸ் 23 ரன்களில் ஆட்டமிழக்க நெதர்லாந்து அணி 41 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது. பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து வீரர்கள் பாஸ் தி லீடே (14 ரன்கள்) கோலின் அக்கர்மன் (17 ரன்கள்) டாம் கூப்பர் (8 ரன்கள்) அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர்.
இதனால் அந்த அணி 13.3 ஓவர்களில் 76 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது. பின்னர் கேப்டன் எட்வர்ட்ஸ்- டிம் பிரிங்கிள் இணைந்து அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு செல்ல, பிரிங்கிள் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது நெதர்லாந்து அணியின் வெற்றிக்கு 9 பந்துகளுக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது.
பின்னர் வான் பீக் களமிறங்கினார். அனல் பறந்த போட்டியின் இறுதி ஓவரில் நெதர்லாந்து அணியின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட 1 பந்து மீதம் இருக்கையில் நெதர்லாந்து அணி 112 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரக அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நெதர்லாந்து அணி திரில் வெற்றி பெற்றது.
நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 16 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.