X

டி20 உலகக் கோப்பை – கனடாவை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி

டி20 உலகக் கோப்பையில் நேற்றிரவு நடைபெற்ற 22-வது லீக் போட்டியில் கனடா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த கனடா அணிக்கு துவக்கம் முதலே விக்கெட்டுகள் சரிய துவங்கின. அந்த அணியின் துவக்க வீரர் நவ்நீத் தலிவால் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய பிரஜத் சிங், நிக்கோலஸ் கிர்டன், ஸ்ரேயஸ் மோவா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும், மற்றொரு துவக்க வீரரான ஆரோன் ஜான்சன் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். இதனால் கனடா அணியின் ஸ்கோர் சற்று அதிகரித்தது. 20 ஓவர்கள் முடிவில் கனடா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை சேர்த்தது. பாகிஸ்தான் சார்பில் முகமது ஆமீர் மற்றும் ஹாரிஸ் ரவுஃப் தலா 2 விக்கெட்டுகளையும், நசீம் ஷா மற்றும் ஷாஹீன் ஷா அப்ரிடி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார். இவருடன் களமிறங்கிய சைம் ஆயுப் 6 ரன்களிலும் அடுத்து வந்த ஃபகர் ஜமான் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் பாபர் அசாம் 33 ரன்களை சேர்த்தார்.

இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 107 ரன்களை சேர்த்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.