Tamilவிளையாட்டு

டி20 உலகக் கோப்பை – இலங்கை, நேபாளம் இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டது

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடர்ஹில்லில் 23-வது ‘லீக்’ ஆட்டம் இன்று நடை பெற இருந்தது. இதில் ‘டி’ பிரிவில் உள்ள இலங்கை-நேபாளம் அணிகள் மோத வேண்டியது.
ஆனால் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த போட்டி தொடரில் மழையால் கைவிடப்பட்ட 2-வது போட்டி இதுவாகும். ஏற்கனவே ‘பி’ பிரிவில் உள்ள இங்கிலாந்து-ஸ்காட் லாந்து அணிகள் மோதிய ஆட்டம் மழையால் பாதியில் ரத்தாகி இருந்தது.

இலங்கை-நேபாளம் இடையேயான ஆட்டம் கைவிடப்பட்டதால் இந்த பிரிவில் தென் ஆப்பிரிக்கா ‘சூப்பர் 8’ சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணி 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. வெற்றிபெற வேண்டிய ஆட்டம் மழையால் ரத்தானதால் இலங்கைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த அணி போட்டியில் இருந்து கிட்டத்தட்ட வெளியேற்றப்படும் நிலையில் இருக்கிறது. இலங்கை அணி தென் ஆப்பிரிக்கா, வங்காள தேசத்திடம் தோற்று இருந்தது.

1 புள்ளியுடன் இருக்கும் அந்த அணி கடைசி ஆட்டத்தில் நெதர்லாந்துடன் 17-ந் தேதி மோதுகிறது. ஒரு புள்ளியுடன் உள்ள நேபாளம் அடுத்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 15-ந் தேதி எதிர்கொள்கிறது. இந்த பிரிவில் வங்காள தேசம், நெதர்லாந்து அணிகள் தலா 4 புள்ளியுடன் உள்ளன. இரண்டு அணிகளுக்கும் 2 போட்டிகள் எஞ்சியுள்ளன.