Tamilவிளையாட்டு

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி – நாளை இந்தியா, தென் ஆப்பிரிக்கா மோதல்

20 ஓவர் உலகக் கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. 20 நாடுகள் இந்த தொடரில் பங்கேற்றன. அவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. லீக் முடிவில் சூப்பர்-8 சுற்றுக்கு இந்தியா, அமெரிக்கா (குரூப் ஏ) ஆஸ்திரேலியா, இங்கிலாந்து (பி), ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் (சி), தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் (டி) ஆகிய அணிகள் தகுதி பெற்றன.

முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான், இலங்கை மற்றும் நியூசிலாந்து, நெதர்லாந்து, அயர்லாந்து, கனடா, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், உகாண்டா, பப்புவா நியூ கினியா, நேபாளம் ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன. சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்ற 8 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. குரூப் 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசமும், குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, அமெரிக்காவும் இடம் பெற்றன.

இதன் முடிவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. முதல் அரை இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்தியது. 2-வது அரைஇறுதியில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை தோற்கடித்தது.

கோப்பைக்கான இறுதிப்போட்டி பிரிட்ஜ்டவுனில் நாளை நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நாளை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தியா 3-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 2007-ம் ஆண்டு நடந்த முதல் 20 ஓவர் உலக கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

2014-ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா, இலங்கையிடம் தோற்றது. இந்திய அணி 2-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. பேட்டிங், பந்து வீச்சில் சம பலத்துடன் உள்ள இந்தியா, சாம்பியன் பட்டத்தை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா (248 ரன்), சூர்யகுமார் யாதவ் (196 ரன்), ரிஷப் பண்ட் (171 ரன்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்ரவுண்டர் ஹர்த்திக் பாண்ட்யா (139 ரன், 8 விக்கெட்) அசத்தி வருகிறார். கோலி 7 ஆட் டத்தில் 75 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளார். அவர் ரன் குவிக்கும் கட்டாயத்தில் உள்ளார். அதேபோல் ஷிவம் துபே அதிரடியாக விளையாட வேண்டும். பந்து வீச்சில் அர்ஷ்தீப்சிங் (15 விக்கெட்), பும்ரா (13 விக்கெட்), குல்தீப் யாதவ் (10 விக்கெட்), அக்சர் பட்டேல் (8 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.

மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அந்த அணி சாம்பியன் பட்டம் வென்று நீண்ட நாள் உலக கோப்பை தாகத்தை தீர்க்கும் ஆர்வத்தில் உள்ளது. பேட்டிங்கில் டி காக் (204 ரன்), டேவிட் மில்லர் (148 ரன்), கிளாசன் (138 ரன்), ஸ்டப்ஸ் (134 ரன்), மார்க்ரம் (119 ரன்), ஹென்ட்ரிக்ஸ் (109 ரன்) ஆகியோர் உள்ளனர். பந்து வீச்சில் நோக்கியா (13 விக்கெட், ரபடா (12 விக்கெட்), ஷம்சி (11 விக் கெட்), மகராஜ் (9 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.

இந்த தொடரில் இரு அணிகளும் தோல்வியே சந்திக்காமல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன. இந்தியா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தென்ஆப்பிரிக்கா சில ஆட்டங்களில் போராடியே வெற்றி பெற்றது. அதே வேளையில் கோப்பைக்காக இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.