டி20 உலகக் கோப்பை – இன்று அமெரிக்கா, அயர்லாந்து அணிகள் மோதல்

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில், புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் 30-வது லீக் ஆட்டத்தில் அமெரிக்க அணி, அயர்லாந்தை (ஏ பிரிவு) சந்திக்கிறது.

தனது முதல் 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றியும் (கனடா, பாகிஸ்தானுக்கு எதிராக), ஒன்றில் தோல்வியும் (இந்தியாவுக்கு எதிராக) கண்டுள்ள அமெரிக்காவுக்கு இது கடைசி லீக்காகும். இதில் வெற்றி பெற்றால் சிக்கலின்றி சூப்பர்8 சுற்றுக்குள் கால்பதிக்கும். தோற்றால் கிட்டத்தட்ட வெளியேற வேண்டியது தான். இந்தியாவுக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் தோள்பட்டை காயத்தால் ஓய்வில் இருந்த அமெரிக்க கேப்டன் மோனக் பட்டேல் அணிக்கு திரும்புவார் என்று தெரிகிறது.

பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து தனது முதல் இரு ஆட்டங்களில் (இந்தியா மற்றும் கனடாவுக்கு எதிராக) தோல்வியை தழுவியது. அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இன்றைய ஆட்டத்தில் அயர்லாந்து கட்டாயம் வென்றாக வேண்டும். அவ்வாறு நடந்தால் தான் பாகிஸ்தானுக்கும் வாய்ப்பு உருவாகும். மாறாக அயர்லாந்து தோற்றால் அதனுடன் சேர்ந்து பாகிஸ்தானும் மூட்டையை கட்ட வேண்டியது தான்.

சர்வதேச 20 ஓவர் போட்டியில் அமெரிக்காவும், அயர்லாந்தும் இதுவரை 2 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்றுள்ளன. லாடெர்ஹில்லில் தற்போது மழை பெய்து வருகிறது. இன்றும் கன மழை பெய்வதற்கு 85 சதவீதம் வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மழையால் ஆட்டம் கைவிடப்பட்டால் அமெரிக்கா 5 புள்ளியுடன் அடுத்த சுற்றை எட்டி விடும். அயர்லாந்து, பாகிஸ்தான் அணிகளின் கதை முடிவுக்கு வந்து விடும். போட்டிக்கு வருணபகவான் வழிவிடுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உள்ளூர் நேரப்படி இரவில் தென்ஆப்பிரிக்கா-நேபாளம், நியூசிலாந்து- உகாண்டா அணிகளின் ஆட்டங்கள் தொடங்கினாலும் இவ்விரு ஆட்டங்களும் இந்திய நேரப்படி முறையே மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலை 5 மணி, காலை 6 மணிக்கு தான் தெரியும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools