Tamilவிளையாட்டு

டி20 உலகக் கோப்பை – இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா

டி20 உலகக் கோப்பை தொடரின் 2-வது அரையிறுதி போட்டியில் மழை குறுக்கிட்டதால் டாஸ் போடுவதிலேயே தாமதம் ஏற்பட்டது. எனினும் டாசில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இந்திய அணிக்கு துவக்க வீரர் விராட் கோலி 9 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இவருடன் களமிறங்கிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக ஆடி 39 பந்துகளில் 57 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் 4 ரன்களில் வெளியேற சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா முறையே 47 மற்றும் 23 ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது. கடைசியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் அர்ஷ்தீப் சிங் முறையே 17 மற்றும் 10 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இங்கிலாந்து சார்பில் கிறிஸ் ஜோர்டான் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரீஸ் டோப்லெ, ஜோப்ரா ஆர்ச்சர், சாம் கர்ரன் மற்றும் ஆதில் ரஷித் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 172 ரன்களை துரத்திய இங்கிலாந்து அணி துவக்கத்திலேயே விக்கெட் இழந்தது. அந்த அணியின் பில் சால்ட் 5 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இவருடன் களமிறங்கிய கேப்டன் ஜாஸ் பட்லர் 23 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதன் காரணமாக அந்த அணி 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 68 ரன்களில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஜஸ்பிரித் பும்ரா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.