X

டி20 உலகக் கோப்பை – ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

டி20 உலகக் கோப்பை தொடரின் 40-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர் பிரெண்டன் கிங் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய ஜான்சன் சார்லஸ் 27 பந்துகளில் 43 ரன்களை சேர்த்தார். அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ஆடி 53 பந்துகளில் 98 ரன்களை குவித்தார்.

இதன் மூலம் அந்த அணியின் ஸ்கோர் அதிகரித்தது. இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷாய் ஹோப் மற்றும் கேப்டன் பொவெல் முறையே 25 மற்றும் 26 ரன்களை அடித்தனர். போட்டி முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்களை குவித்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் குலாப்தின் நயிப் விக்கெட்டுகளையும், ஒமர்சாய் மற்றும் நவீன் உல் ஹக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

கடின இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் குர்பாஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய இப்ராகிம் 38 ரன்களை சேர்த்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால் அந்த அணி ரன் குவிக்க முடியாமல் திணறியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் அபார பந்துவீச்சு காரணமாக ஆப்கானிஸ்தான் அணி 16.2 ஓவர்களில் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஒபெட் மெக்காய் 3 விக்கெட்டுகளையும், அகெயில் ஹொசைன் மற்றும் குடகேஷ் மோட்டி தலா 2 விக்கெட்டுகளையும், ஆண்ட்ரே ரசல் மற்றும் அல்சாரி ஜோசப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.