செயின்ட் லூசியாவில் நேற்று இரவு நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா அரை சதம் அடித்து 92 ரன்கள் குவித்தார். சூர்யகுமார் 31 ரன், ஷிவம் துபே 28 ரன், பாண்ட்யா 27 ரன்னும் எடுத்தனர்.
அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. டிராவிஸ் ஹெட் 76 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக வெற்றிகள் பெற்ற இலங்கையின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது. இலங்கை அணி 53 போட்டிகளில் 33-ல் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி 50 போட்டிகளில் 34-ல் வெற்றி பெற்றுள்ளது.
அடுத்த இடங்களில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகியவை உள்ளன.