7-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற அக்டோபர் 17-ந்தேதி முதல் நவம்பர் 14-ந்தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஒமனில் நடக்கிறது.
இப்போட்டி தொடருக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரோன் பிஞ்ச் கேப்டனாக நீடிக்கிறார். அவரும், ஸ்டீவ் ஸ்மித்தும் அணிக்கு திரும்பி உள்ளனர். அதேபோல் டேவிட் வார்னர், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கம்மின்ஸ், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோரும் அணிக்கு திரும்பி உள்ளனர்.
முக்கிய வீரர்கள் உலகக்கோப்பைக்கான அணியில் இடம் பெற்று இருப்பது ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக இருக்கும்.
இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பையை வெல்லும் திறன் ஆஸ்திரேலிய அணிக்கு உள்ளது என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு சிறந்த ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு கோப்பையை வெல்லும் திறன் உள்ளது. ஜோஷ் இங்லிஸ் வாய்ப்பு பெற்றிருப்பதை பார்க்க அருமையாக உள்ளது.
அவர் ரன்களை குவிக்கக்கூடியவர். ஒட்டுமொத்தமாக இது ஒரு திறமையான வீரர்களை கொண்ட அணி என்று நான் நினைக்கிறேன். உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வெல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.