20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2020) அக்டோபர் 18-ந் தேதி முதல் நவம்பர் 15-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.
இந்த போட்டியில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இதில் 10 அணிகள் நேரடியாக விளையாடும். மீதியுள்ள 6 நாடுகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.
இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. இதில் இலங்கை, வங்காளதேசம் தவிர மற்ற 8 அணிகளும் நேரடியாக 2-வது சுற்றில் விளையாடும்.
20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகின்றன. இதில் 14 அணிகள் பங்கேற்றன. இதிலிருந்து 6 நாடுகள் தகுதி பெறும்.
பப்புவா நியூகினியா, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா ஆகிய 4 நாடுகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன. இந்த நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தின் மூலம் ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகளும் உலக கோப்பை போட்டிக்கு நுழைந்தன. கடைசி இரண்டு அணிகளாக இந்த அணிகள் தேர்வு பெற்றன.
ஆங்காங்குக்கு எதிரான போட்டியில் ஓமன் 12 ரன் வித்தியாத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஓமன் அணி தகுதி பெற்றது.
உலக கோப்பை போட்டிக்கான தகுதி சுற்றில் ஒரு அரைஇறுதியில் அயர்லாந்து – நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
மற்றொரு அரைஇறுதியில் பப்புவா நியூகினியா – நமிபியா அணிகள் மோதுகின்றன.